அன்னை ராபியா அறக்கட்டளை

Sunday, August 17, 2025

புளியங்குடி ஹிக்மத் அகாடமி நடத்திய சுதந்திர தின விழா மற்றும் P.N.M.முஹம்மது யூசுப் நினைவு கோப்பைக்கான விநாடி வினா நிகழ்ச்சி…

79ஆவது சுதந்திர தின விழா மற்றும் P.N.M முஹம்மது யூசுப் நினைவு கோப்பைக்கான விநாடி வினா நிகழ்ச்சி ஹிக்மத் அகாடமி வளாகத்தில் கடந்த 15-08-2025 அன்று மாலை இனிதே நடைபெற்றது.

இறைவசனங்களோடு இனிதே தொடங்கிய இவ்விழாவிற்கு  ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகர் ஹாஜி M. சுல்தான் செய்யது இப்ராஹிம் B.Com., தலைமை தாங்கினார். காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியையும் ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகருமான ஹாஜிமா. சுபைதா பானு M.Sc., M.A., M.Ed., முன்னிலை வகித்தார். மீரா கிளினிக் டாக்டர். அப்துல் காசிம் BSMS அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தனது தந்தை P.N.M முஹம்மது யூசுப் நினைவாக நடத்தப்படும் போட்டியில் இறுதிவரை கலந்து கொண்டு இவ்விழாவிற்கு சிறப்பு செய்தார் 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி. M.M.Y. முகம்மது நயினார் MC  அவர்கள்.

முன்னதாக அகாடமியின் நிர்வாக இயக்குநர் ஹாஜி. A. அபுதாஹீர் வரவேற்புரையாற்றினார்.  செயல்திட்ட இயக்குநர் A. செய்யது B.Com.,          நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நம் முன்னோர்களின் பங்கு, பெற்ற சுதந்திரத்தை எவ்வாறு பேணிக் காக்க வேண்டும்? நாம் அடைய வேண்டிய இலக்குகள் என்னென்ன? என்பது குறித்து விருந்தினர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர்.

அடுத்ததாக மாணவ/மாணவியர் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது. வரலாறு, இலக்கியம், அறிவியல், பொது அறிவு, நாட்டு நடப்பு, பள்ளிப் பாடம் உள்ளிட்ட தலைப்புகளில் கேள்விகள் தொகுப்பப்ட்டு இவ்விநாடி வினாப் போட்டி நடத்தப்பட்டது.

மாணவ/மாணவியர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த  போட்டிகள் மிக அவசியம் என்பதன் அடிப்படையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை புளியங்குடி ஹிக்மத் அகாடமி முன்னெடுத்து வருகிறது.  மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக போட்டியில் பங்கு பெற்ற நான்கு குழுக்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவ/மாணவியர் மிகுந்த உற்சாகத்துடன் இப்போட்டியில் பங்கெடுத்து விடையளித்தாலும் நம் வரலாறு சார்ந்த சில எளிய கேள்விகளுக்குக்கூட அவர்களால் பதில் அளிக்க இயலவில்லை என்பதன் மூலம் மாணவர்களை இன்னும் நிறைய வழிகளில் தயார்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அதன் அடிப்படையில் இதுபோன்ற போட்டிகளையும், பயிற்சிகளையும் ஹிக்மத் அகாடமி தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று விழாவிற்கு பிந்தைய ஆசோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டிகள் விரைவில் தொடர்ந்து வரும் (இறைவன் நாடினால்)...

 

என்றும் கல்விப் பணியில்:

ஹிக்மத் அகாடமி,

புளியங்குடி.

 



















 

 

Share:

0 comments:

Post a Comment

Annai Rabiya Trust

Hikmath Academy

Discovery Training Institute

Annai Rabiya Publication

பார்வையாளர்கள்